ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை

Update:2022-09-13 22:02 IST


திருப்பூரில் ஆட்டோ டிரைவரை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆட்டோ டிரைவர்

திருப்பூர் அனுப்பர்பாளையம் தண்ணீர்பந்தல் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாலா (26). இவர் கடந்த 8-4-2014 அன்று அதிகாலை 2 மணிக்கு தனது நண்பர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து பாலாவின் சகோதரர் வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், பாலா அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.

அனுப்பர்பாளையம் புதூரில் கட்டிட தொழிலாளியான ராக்கப்பன் (49), மகன் அருண்பாண்டியன் (27) மற்றும் ராக்கப்பனின் 2-வது மனைவி விஜயலட்சுமி (34) ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர். விஜயலட்சுமிக்கு, ஆட்டோ டிரைவர் பாலா பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

3 பேருக்கு ஆயுள் தண்டனை

இது தெரிய வந்ததும் பாலாவை அழைத்து கண்டித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து அவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தததால் செல்போனில் அவரை தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரவழைத்துள்ளனர். பின்னர் ராக்கப்பன், விஜயலட்சுமி, அருண்பாண்டியன் ஆகிய 3 பேரும் சேர்ந்து பாலாவை அடித்து கொலை செய்து, பிணத்தை வீட்டுக்குள் புதைத்தது விசாரணையில் தெரிய வந்தது. தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பாலாவின் உடலை தோண்டி எடுத்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கை அனுப்பர்பாளையம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கொலை குற்றத்துக்காக ராக்கப்பன், அருண்பாண்டியன், விஜயலட்சுமி ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.2 ஆயிரம் அபராதம், கொலையை மறைத்த குற்றத்துக்காக 3 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.

பாராட்டு

விஜயலட்சுமியின் 8 வயது மகளை குழந்தைகள் காப்பகத்தில் பராமரித்து படிக்க வைக்க நீதிபதி அறிவுறுத்தியுள்ளதாக வக்கீல் கனகசபாபதி தெரிவித்தார். சிறப்பாக செயல்பட்ட அனுப்பர்பாளையம் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் பாராட்டினார்.

============

மேலும் செய்திகள்