ஆபாச படத்தை வெளியிட போவதாக பெண் என்ஜினீயருக்கு மிரட்டல்
காதலித்த போது நெருக்கமாக இருந்த ஆபாச படத்தை வெளியிட போவதாக பெண் என்ஜினீயருக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
காதலித்த போது நெருக்கமாக இருந்த ஆபாச படத்தை வெளியிட போவதாக பெண் என்ஜினீயருக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெண் என்ஜினீயருக்கு மிரட்டல்
நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சோந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
நான் சென்னையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூாியில் படித்தேன். அப்போது அதே கல்லூரியில் படித்த நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்த முகேஷ் (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது முகேஷ், என்னை காதலிப்பதாக கூறினார். அந்த காதலை ஏற்று கொண்டேன். பின்னர் அவருடைய செயல்பாடு சரியாக இல்லை. இதனால் அவரிடம் இருந்து விலகி விட்டேன்.
இதனை தொடர்ந்து நான் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். இந்தநிலையில் முகேஷ் செல்போனில் தொடர்பு கொண்டு, காதலித்த போது உன்னுடன் நெருக்கமாக இருந்த ஆபாச படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட போவதாக கூறினார். மேலும் அந்த ஆபாச படங்களை பதிவிடாமல் இருக்க ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டியதோடு 2 பவுன் நகையையும் பறித்து கொண்டார். எனவே முகேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாலிபர் கைது
இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.அதன்படி முகேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்தநிலையில் முகேஷின் செல்போன் சிக்னலை போலீசார் கண்காணித்தனர். அப்போது அவர் நாகர்கோவிலுக்கு வந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். காதலித்த போது நெருக்கமாக இருந்த ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட போவதாக பெண் என்ஜினீயரை மிரட்டியதாக வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.