மரக்கன்றுகளை வளர்க்க விரும்புபவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டையை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மரக்கன்றுகளை வளர்க்க விரும்புபவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

Update: 2023-07-28 19:49 GMT

பசுமைக்குழு கூட்டம்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வனத்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான பசுமைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி கூறியதாவது:- தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில், மாநிலத்தின் பசுமை போர்வையினை அடுத்த 10 ஆண்டுகளில் தற்போது உள்ள 23.27 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்தும் வகையில், பசுமை தமிழகம் இயக்கம் உருவாக்கப்பட்டு அனைத்து துறைகளின் மூலம் மரக்கன்றுகளை நடவு செய்யவுள்ளது.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை 7.89 சதவீதமாக உள்ள பசுமைப் போர்வையினை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக உயர்த்தும் வகையில், ஆண்டுதோறும் சராசரியாக 61.1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்திட வேண்டும். இம்மாெபரும் இலக்கினை அடையும் வகையில், மாவட்ட பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மரக்கன்றுகள்

இக்குழு வனத்துறையுடன் இணைந்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மரக்கன்றுகளை ஆண்டுதோறும் நடுவதற்கு இலக்கீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எனவே அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கு முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2023-2024, 2024-2025, 2025-2026-ம் ஆண்டிற்கான இலக்கினை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, புதுக்கோட்டை மாவட்டத்தினை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றிட ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

மேலும் மரக்கன்றுகளை வளர்ப்பதில் ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் http://gtm.org.in/gtmapp/login.aspx. என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், ஆர்.டி.ஓ.க்கள் முருகேசன் (புதுக்கோட்டை), குழந்தைசாமி (இலுப்பூர்), ஜஸ்டின் ஜெபராஜ் (அறந்தாங்கி), துணை இயக்குனர் (தோட்டக்கலை) குருமணி, செயற்பொறியாளர் (காவிரி-வைகை-குண்டாறு) சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் உமாசங்கர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்