அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைப்பவர்கள் கோர்ட்டுக்கு செல்வதால் எந்த பயனும் இல்லை

அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைப்பவர்கள், கோர்ட்டுக்கு செல்வதால் எந்த பயனும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.;

Update:2023-04-18 00:15 IST

அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைப்பவர்கள், கோர்ட்டுக்கு செல்வதால் எந்த பயனும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி

மயிலாடுதுறையில் அ.ம.மு.க.வினர், அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமை தாங்கினார்.

அ.ம.மு.க. முன்னாள் மாநில இளைஞரணி செயலாளர் கோமல் அன்பரசன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான ஓ.எஸ்.மணியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

உண்மையான அ.தி.மு.க.

தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் தற்போது தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என கூறுகின்றனர். பொய்யான தேர்தல் வாக்குறுதியை கூறி தி.மு.க. ஆட்சியைப் பிடித்துள்ளது. 500-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. நிறைவேற்றிய வாக்குறுதிகளை ஐந்து விரல்களில் எண்ணி விடலாம்.

எம்ஜிஆர் கொண்டு வந்த கொடி, இரட்டை இலை சின்னம், அ.தி.மு.க. தலைமை அலுவலகம் ஆகியவை யாரிடம் இருக்கிறதோ அவர்கள் தான் உண்மையான அ.தி.மு.க. தற்போது இவை அனைத்தும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையில்தான் இருக்கிறது.

பிரயோஜனம் இல்லை

அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைப்பவர்கள் கோர்ட்டு படிகளில் ஏறி, இறங்குவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. அ.தி.மு.க. தொண்டர்கள் யார் பெயரை ஓங்கி ஒலிக்கிறார்களோ அவர்தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருக்க முடியும். அவர்தான் எடப்பாடி பழனிசாமி.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் சந்தோஷ்குமார், இளங்கோவன், மகேந்திரன், ஏ.கே.சந்திரசேகரன், நற்குணன், பேரூர் செயலாளர் எம்.சி.பாலு, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் நாஞ்சில் கார்த்தி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்