குப்பை கொட்டுவதை எதிர்த்து ஊர்வலம் சென்றவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு

புனல்காடு பகுதியில் குப்பை கொட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியது.

Update: 2023-05-29 17:25 GMT

புனல்காடு பகுதியில் குப்பை கொட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியது.

குப்பைகொட்ட எதிர்ப்பு

திருவண்ணாமலை அருகே புனல்காடு கிராமத்தில் நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளை கொட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையை கைவிடக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் கடந்த 13-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தினமும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர்கள் 17-வது நாளான நேற்று ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.

போராட்டத்தில் பங்கேற்பதற்காக அவர்கள் நேற்று காலை கிரிவலப்பாதையில் உள்ள போக்குவரத்து பணிமனை அருகே திரண்டனர். அப்போது அவர்களிடம் அண்ணா நுழைவு வாயில் பகுதியில் இருந்து ஊர்வலத்தை தொடங்குமாறு போலீசார் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்கள் அண்ணா நுழைவு வாயில் அருகே திரண்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

வாக்குவாதம், தள்ளுமுள்ளு

காலை 11 மணி அளவில் ஊர்வலமாக செல்ல பொதுமக்கள் ஆயத்தமாகினர். அப்போது அவர்களை ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் போலீ்ஸ் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும் சாலை தடுப்புகளும் கொண்டு வந்து வைத்து அரண்போல் போலீசார் நின்றனர். இதைப்பார்த்த பொதுமக்கள் ஏன், நாங்கள் ஊர்வலமாக செல்லக்கூடாது என்று போலீசாரிடம் கேட்டனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு கார்த்திேகயன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைதடுப்புகளை தூக்கி வீசி அவர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். பொதுமக்கள் அனைவரும் போளூர் சாலையில் கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.

சாலை மறியல்

அவர்களை கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்காக கலெக்டர் அலுவலக பகுதியில் ஏரி அருகே சாலையின் குறுக்காக போலீஸ் வேன்களை நிறுத்தி போலீசார் தயாராக இருந்தனர்.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தை ஊர்வலம் நெருங்கியது. போலீசாரை பார்த்ததும், தாங்கள் தடுத்து நிறுத்தப்படுவோம் என்று நினைத்து அறிவியல் பூங்கா முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சுற்றி போலீசார் அரண்போல் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் பெரும்பாலும் பெண்கள் தான் அதிகமாக குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் ஆக்ரோஷமான மனநிலையிலேயே காணப்பட்டனர். மறியலில் ஈடுபட்ட அவா்கள் குப்பை கொட்டக்கூடாது என்று கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.

சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக சாலைமறியலில் ஈடுபட்ட அவர்கள் திடீரென முன்னேறி செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பயங்கரமாக தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு நிலைமையை போலீசாரால் கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை.

போர்க்களமாக மாறியது

பெண்கள் பலர் தனித்தனியாக பிரிந்து குடியிருப்பு பகுதி வழியாகவும், அருகில் உள்ள ஏரி கால்வாய் வழியாகவும் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். ஒருகட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் போலீசார் திகைத்தனர்.

இதையடுத்து கலெக்டர் அலுவலகம் அருகே நெருங்கிய சிலரை போலீசார் மடக்கி வேனில் ஏற்றி கைது செய்ய முயன்றனர். அப்போது பெண்களுக்கும் போலீசாருக்கும் பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளுவில் குழந்தைகள், வயதான பெண்கள் பலர் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர். பல பெண்களின் உடைகள் அவிழ்ந்தும், தலைமுடிகள் கலைந்தும், அழுகையும், குழந்தைகளின் கூக்குரலும் என அந்த பகுதி போர்க்களம் போன்று காட்சியளித்தது.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இறுதியாக அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு நுழைவு வாயில் பகுதிக்கு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நுழைவு வாயில் கதவு மூடப்பட்டு அங்கு போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்தின் மற்ற பாதைகள் வழியாக வளாகத்துக்குள் புகுந்தனர். கலெக்டரின் கார் நிறுத்தும் இடமான போர்டிகோ பகுதியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். கலெக்டர் அலுவலகம் உள்ளே செல்லும் கதவினையும் மூடினர். இதையடுத்து பெண்கள் போர்டிகோ பகுதியில் உள்ள படிக்கட்டில் அமர்ந்தும், அதில் படுத்துக் கொண்டும், ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அண்ணாநுழைவு வாயில் அருகே தடுக்கப்பட்ட நிர்வாகிகளும் அங்கு சாலைமறியலில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

கலெக்டரிடம் முறையீடு

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலெக்டர் முருகேஷை சந்தித்து இதுகுறித்து முறையிட்டனர். அவர் நாளை (அதாவது இன்று) பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்