தூத்துக்குடி: ரசாயன கழிவு கலப்பால் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய உப்பாற்று ஓடை - கனிமொழி எம்.பி ஆய்வு
தூத்துக்குடியில் ரசாயன கழிவு கலக்கப்பட்ட உப்பாற்று ஓடயை கனிமொழி எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி கோமஸ்புரம் பகுதியிலுள்ள உப்பாற்று ஓடை முழுவதும் ரசாயனக் கழிவுநீர் காரணமாக இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதி நிலத்தடி நீர் முழுவதுமாக நஞ்சாக்கப்பட்டு, அந்த நீரைப் பயன்படுத்துவோருக்கு பல்வேறு நோய்கள் வர காரணமாகிறது. மேலும் இந்த நீரை எடுத்து உப்பளங்களில் தயாரிக்கப்படும் உப்பை பயன்படுத்தும் மக்களுக்கும் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
மேற்படி இரசாயனக் கழிவுநீர் கடலில் கலப்பதால் அனைத்து கடல்நீர் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நீரின் நிறம் மாறி இருக்கும் இந்த உப்பாத்து ஓடையை இன்று கனிமொழி எம்.பி. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இங்கு இயங்கி வரும் மீன் கம்பெனிகளின் ரசாயன கழிவுகள் ஓடையில் கலக்கப்படுகிறதா? என அதிகாரிகளிடம் விசாரணை செய்தார்.
இந்த ஆய்வின்போது, மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.