சென்னை ஐஐடி முதலிடம் பிடித்ததற்கு இதுதான் காரணம்: காமகோடி பேட்டி

சென்னை ஐஐடியில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறினார்.

Update: 2024-08-13 10:34 GMT

சென்னை,

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) இயங்கி வருகிறது. இந்த கட்டமைப்பானது, நாடுமுழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில், தரவரிசை பட்டியலை தயாரித்து ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், 2024-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. என்.ஐ.ஆர்.எப். தரவரிசை பட்டியலில், தொடர்ந்து 6-வது முறையாக சென்னை ஐ.ஐ.டி முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது.

இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஆசிரியர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் தங்களது பொறுப்பை சிறப்பாகச் செய்துள்ளதால் இந்திய அளவில் சென்னை ஐஐடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கிராமப்புற பகுதிகளுக்கும் முறையான, தரமான கல்வி போய் சேர வேண்டும் என்பது எங்களது முக்கிய நோக்கம். தமிழ்நாடு அரசுடன் இணைந்து பல கல்வித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். அதன் விளைவாக 5000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். சென்னை ஐஐடியில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்