'தமிழ்நாடு காவல்துறையின் வரலாற்றில் இது முக்கியமான நாள்' - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

தமிழக போலீஸ் துறைக்கு மிக உயரிய ஜனாதிபதி சிறப்பு கொடியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.

Update: 2022-07-31 06:29 GMT

சென்னை,

தமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு கொடி இந்தியாவில் இதுவரை 10 மாநில போலீசாருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது.தென்மாநிலங்களில் இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம் தமிழகம் தான்.

தமிழக போலீஸ் துறைக்கு கவுரவமிக்க ஜனாதிபதியின் கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது.இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். துணை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு தமிழக போலீசார் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

இந்தியாவில் அதிக மகளிர் போலீஸ் நிலையங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. பெண்களுக்கு சமவாய்ப்புகளை வழங்குவதன் மூலம் தமிழ்நாடு நல்ல வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது. தமிழகத்தில் 46 சைபர் கிரைம் காவல் நிலையங்களுடன் தனி சைபர் கிரைம் விங் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிறப்பான திட்டமாகும்.

தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பாரம்பரியம் உள்ளது. இங்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு என்று தனியாக ஒன்று செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. கடத்தப்பட்ட கடவுள் சிலைகளை மீட்பதில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் பல சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

மேலும், என் மனதில் சென்னைக்கு என்றும் தனி இடம் உண்டு. இந்தியாவிலேயே சிறந்த காவல்துறை தமிழ்நாடு காவல்துறை என்று சொல்வதில் எனக்கு தயக்கமில்லை. தமிழ்நாடு காவல்துறையின் வரலாற்றில் இது முக்கியமான நாள். ஒவ்வொரு தமிழருக்கும் இது மகிழ்ச்சியான நாளாகும்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மற்றும் தமிழர்கள் குறித்த நிகழ்த்துக் கலைக்கு பாராட்டுக்கள். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து போலீசாருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்