திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
19 ஆண்டுகளுக்கு பிறகு திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருவக்கரையில் பிரசித்திபெற்ற சந்திரமவுலீஸ்வரர், வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது. பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த திருத்தலம் தொண்டை நாட்டிலுள்ள 32 சிவத்தலங்களுள் 30-வது திருத்தலமாகும்.
வராக நதி என்று அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் வடகரையில் 7 நிலை ராஜகோபுரத்துடன் சுமார் 10 ஏக்கர் நிலப்பரவில் இக்கோவில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இக்கோவில் திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற சிறப்புடையதாகும்.
19 ஆண்டுகளுக்கு பிறகு
பல்வேறு சிறப்புகளை பெற்ற திருவக்கரை கோவிலில் 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து பல லட்சம் ரூபாய் செலவில் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி கடந்த 8-ந் தேதி அனுக்சை பூஜையுடன் விழா தொடங்கியது. கடந்த 9-ந் தேதி காலை சாந்தி ஹோமமும், மாலை முதல் கால பூஜையும், 10-ந் தேதி காலை 2-ம் கால பூஜையும், மாலை 3-ம் கால பூஜையும் நடந்தது.
மகா கும்பாபிஷேகம்
நேற்று காலை 6 மணிக்கு 4-ம் கால பூஜையும், 8 மணிக்கு பரிவார யாகங்கள் பூர்ணாகுதியும், 9.30 மணிக்கு கடம் புறப்பாடும் நடைபெற்றது. தொடர்ந்து மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் காலை 10.55 மணியளவில் விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு மேள, தாளம் முழங்க புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலமும் மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
பக்தர்கள் தரிசனம்
விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், சக்கரபாணி எம்.எல்.ஏ., மற்றும் கடலூர், விழுப்புரம், புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வசதிக்காக மரக்காணம், திண்டிவனம் பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆன்மிக அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.