முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்
கந்தசஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
கந்தசஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
திருக்கல்யாண வைபவம்
திருமணம் ஆகாதவர்கள் தெய்வ திருமணங்களை கண்டு வழிபட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும். குறிப்பாக தெய்வ திருமணங்களை பார்த்தால் நமது திருமண வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகும் என்பது ஐதீகம். இதன் காரணமாகவே கோவில்களில் நடைபெறும் தெய்வீக திருமணங்களை பக்தர்கள் கண்குளிர தரிசனம் செய்கிறார்கள்.
முருகப்பெருமானுக்கு நடத்தப்படும் விழாக்களில் முதன்மையானது கந்தசஷ்டி விழா மற்றும் அதனுடன் இணைந்த சூரசம்ஹாரம் ஆகும். கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த கந்தசஷ்டி விரதத்தின் தொடர்ச்சியாக சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் நேற்று முருகன்-தெய்வானை திருக்கல்யாணம் அனைத்து முருகப்பெருமான் கோவில்களிலும் நடைபெறும். அந்தவகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களிலும் நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
வயலூர் முருகன் கோவில்
திருச்சி வயலூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் முடிந்த மறுநாளான நேற்று இரவு 7 மணி அளவில் ஸ்ரீதேவசேனா சமேத சுப்ரமணியசுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, தெய்வானை முருகப்பெருமான் மாலை மாற்றும் வைபவம் மற்றும் அலங்கார தீபம், மங்கள ஆரத்தி நடைபெற்றது. இதனை பெருந்திரளான பக்தர்கள் கண்டு வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருச்சி ஜங்ஷன் ரவுண்டானா அருகே உள்ள வழிவிடு வேல்முருகன் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், தாராநல்லூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மற்றும் உறையூர், சுப்பிரமணியபுரம் உள்பட திருச்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
தா.பேட்டை
தா.பேட்டையில் காசிவிசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக பெருமானுக்கு கந்தசஷ்டியையொட்டி நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் சீர்வரிசையுடன் வந்திருந்து வழிபட்டனர்.
இதேபோன்று தா.பேட்டை அருகே என்.கருப்பம்பட்டி கிராமத்தில் வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமான் கோவில், தேவானூர் சண்முககிரி மலையில் உள்ள பால தண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட கோவில்களில் வள்ளி, தெய்வானை, முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடந்தது.
திருவெறும்பூர்
திருவெறும்பூர் அருகே வேங்கூர் செல்லும் சாலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் முருகப்பெருமானுக்கு நேற்று காலை 9 மணி அளவில் பால், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதனையடுத்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் மணப்பாறை, துறையூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முருகன்கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.