வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடிய முதியவர் கைது

Update: 2022-08-09 16:23 GMT


திருப்பூர் வாவிபாளையத்தை அடுத்த எழில் நகரை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 29). இவர் கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி பொங்கல் பண்டிகைக்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் 18-ந்தேதி வீட்டுக்கு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 6½ பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து சந்தனகுமார் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று அணைப்புதூர் போலீஸ் சோதனை சாவடியில் திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த முதியவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் அவினாசியை அடுத்த சேவூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (60) என்பது தெரியவந்தது. மேலும் சந்தனகுமார் வீட்டில் நகை-பணத்தை திருடியதை நாகராஜ் ஒப்புக்கொண்டார். இதை அடுத்து போலீசார் நாகராஜை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 5½ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நாகராஜ் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்