அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு உடலில் எண்ணெயை தடவி சாதூர்யமாக தப்பிய கொள்ளையர்கள்

கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருடு போனது. கொள்ளையனை பிடிக்க முயன்றபோது அவர்கள் உடல் முழுவதும் எண்ணெயை தடவி இருந்ததால் சாதூர்யமாக தப்பி சென்றனர்.

Update: 2023-09-02 02:08 GMT

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 40). இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் கதவு திறந்து கிடந்த நிலையில் செந்தில் குமார் குடும்பத்தினர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது உடலில் எண்ணெயை தடவி கொண்டு வீட்டுக்குள் 2 மர்ம ஆசாமிகள் நுழைந்தனர். அங்கு தனியறையில் இருந்த பீரோவை மெல்ல திறந்து அதிலிருந்த 2 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த செல்போனை திருடினர். சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த செந்தில் குமார், கொள்ளையர்களை பிடிக்க முயன்றார். அவர்கள் உடலில் எண்ணெய் தடவி இருந்ததால் நழுவி சென்றனர்.

பின்னர் போராடி கொள்ளையர்களில் ஒருவனை மடக்கி பிடித்தார். அப்போது மற்றொரு கொள்ளையன் செந்தில் குமாரை மது பாட்டில் மற்றும் கைகளால் தாக்கினார். செந்தில் குமார் நிலை தடுமாறி மயக்கம் அடைந்தார். மின்னல் வேகத்தில் மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பினர்.

அதே பகுதியில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன் (வயது 72). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். நள்ளிரவில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த தங்க நகை, வெள்ளி பொருட்கள், மற்றும் பணத்தை அள்ளி சென்றனர்.

வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்பி பிறகு தான் திருடு போன பொருட்களின் விவரம் தெரிய வரும். நள்ளிரவில் ஒரே பகுதியில் 2 வீடுகளில் மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டி இருப்பது தேர்வழி கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து துப்பு துலக்கிட மோப்ப நாய் 'நிக்கி' கொண்டுவரப்பட்டது.

இந்த சம்பவங்கள் குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டி அடுத்த துராப்பள்ளம் கிராமத்தில் இதைபோல திருடு போனது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்