தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் சனாதனத்தை பற்றி பேசி தப்பிக்க பார்க்கிறார்கள் பா.ஜ.க.வினர் மீது முத்தரசன் குற்றச்சாட்டு

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் பா.ஜனதாவினர் சனாதனத்தைப் பற்றி பேசி தப்பிக்க பார்க்கிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார்.

Update: 2023-09-17 21:44 GMT

நாகர்கோவில்:

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் பா.ஜனதாவினர் சனாதனத்தைப் பற்றி பேசி தப்பிக்க பார்க்கிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார்.

திரும்ப பெற வேண்டும்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று மாலையில் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி தனது பிறந்த நாளில் விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கியுள்ளார். 18 தொழில்களை கொண்டுள்ள இந்த விஸ்வகர்மா திட்டத்திற்கு குடும்ப ரீதியில் மேம்படுத்த அறிவிப்பு வெளியிடாமல், குறிப்பிட்ட தொழில்களை செய்பவர்களின் 18 வயது கடந்த பிள்ளைகள் மேல் படிப்புக்கு செல்லக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு அவர்களுக்கு தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

தேர்தல் வாக்குறுதி

மோடியும், பா.ஜனதாவும் சனாதனத்தை பற்றி அதிகமாக பேசுகிறார்கள். 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கொடுத்த எந்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சனாதனத்தின் பெயரால் தப்பிக்க முயற்சி செய்கிறார்கள்.

தமிழக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. தமிழிசை சவுந்தரராஜன் துணைநிலை கவர்னராக உள்ளார். அவர் அரசியல் பேசி வருகிறார். தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ள அவர் 2½ ஆண்டுக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். பா.ஜனதா ஆட்சி அமைத்ததும் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என கூறினார்கள். அதற்கு பதிலாக ரூ.15 ஆயிரம் தொகையாவது வழங்க ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.

சர்வாதிகார போக்கு

காவிரி நதிநீர் பிரச்சினையில் கோர்ட்டு தீர்ப்புப்படி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக மாநிலம் தர வேண்டும். இந்த பொது பிரச்சினையில் அ.தி.மு.க., பா.ஜனதா எம்.பி.க்களும் இணைய வேண்டும்.

இந்தியா என்ற பெயரை பாரத் என்று ஏன் மாற்ற வேண்டும்? இது தொடர்பாக எந்த அமைப்பிலும் விவாதிக்கப்படவில்லை. இதற்கு பெயர் தான் சர்வாதிகாரம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டின் போது மாநிலத் துணைச் செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், நிர்வாகி இசக்கி முத்து உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பெரியார் சிைலக்கு மாலை அணிவிப்பு

முன்னதாக மாநில செயலாளர் முத்தரசன் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்