அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்து வேனை எடுத்துச் சென்றனர்

ஆவின் கூட்டுறவு சங்கத்துக்கு ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் வந்தன. இதன்மூலம் நூதன முறையில் பால் திருடப்பட்டதா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஒரு வேனை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்து எடுத்துச் சென்றனர். அவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-06-07 18:28 GMT

ஒரே பதிவு எண்

வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய (ஆவின்) அலுவலகம் வேலூர் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு அவை பாக்கெட்டுகளாக மாற்றி முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆவின் நிறுவனத்தில் நள்ளிரவு முதல் பால்பாக்கெட்டுகள் வாகனங்களில் முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி பால்பாக்கெட்டுகள் எடுத்துச்செல்ல நேற்று முன்தினம் ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் ஆவின் அலுவலகத்துக்கு வந்திருந்தன. இதை பார்த்து ஆச்சரியம் அடைந்த உதவி பொதுமேலாளர் (விற்பனை) சுதாரித்துக்கொண்டார்.

உடனடியாக இதுகுறித்து ஆவின் பொதுமேலாளர் சுந்தரவடிவேல் (பொறுப்பு)க்கு தகவல் தெரிவித்தார். அவர், இரு வாகன டிரைவர்களிடமும் விசாரணை நடத்தினார். அவர்கள் சரிவர பதில் தெரிவிக்காததால் இரு வாகனங்களையும் அங்கிருந்து எடுத்து செல்ல அனுமதிக்காமல் ஆவின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

பால் திருட்டா?

இதன் மூலம் வேலூர் ஆவினில் ஒரே பதிவு எண்ணில் இரு வாகனங்களை இயக்கி தினமும் பால் நூதன முறையில் திருடப்பட்டு இருக்கிறதா என்பது குறித்து பொதுமேலாளர் விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறுகையில், ஆவின் நிறுவனத்தில் ஒரே பதிவு எண்ணில் இருவாகனங்களில் பால் ஏற்றப்பட்டுள்ளது. இது கடத்தல் முயற்சியா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அன்றைய தினம் பால் அளவுகள் குறைந்துள்ளதா? என்பது கண்டறியப்பட உள்ளது. கொள்முதல் அளவு மற்றும் வினியோகம் செய்த அளவு இவற்றை ஒப்பிட்டு பார்க்கப்பட உள்ளது.

இதில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டால் பால் திருட்டு உறுதிசெய்யப்படும். அதேவேளையில் இந்த சம்பவம் தினமும் நடந்துள்ளதா? என்பதையும் கண்டறியும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் காட்சியை கொண்டும் ஆய்வு செய்ய உள்ளோம். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட டிரைவர் மீது புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு வேன் தொடர்பாக அனைத்து ஆவணங்கள் உள்ளதாகவும், மற்றொரு வேனுக்கு ஆவணங்கள் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

மிரட்டி எடுத்து சென்றனர்

இந்த நிலையில் நள்ளிரவில் ஆவின் நிறுவனத்துக்கு வந்த மர்மநபர்கள் அதிகாரியை மிரட்டி விட்டு ஆவின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆவணங்கள் இல்லாத வேனை எடுத்துச்சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக ஆவின் உதவி பொது மேலாளர் சிவக்குமார் (விற்பனை) நிர்வாகம் சார்பில் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆவின் நிறுவனத்தில் மேற்பார்வை செய்தபோது ஒரே பதிவு எண்ணில் 2 வேன்கள் நின்றிருந்தன. விசாரித்தபோது ஒருவேனில் ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. அந்த வாகனத்தின் உரிமையாளர் சிவக்குமார் என்பது தெரியவந்தது. அவர் ஆவணத்தை எடுத்து வருவதாக சென்றார். அந்த வாகனம் ஆவின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து இரவில் சிவக்குமார் மற்றும் அவரின் டிரைவர் விக்கி ஆகியோர் வந்தனர்.

அவர்கள் ஆபாசமாக பேசி வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்றனர். இதை தடுத்தபோது டிரைவர் விக்கி வண்டியை இயக்கி கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்து, இருவரும் வாகனத்தை எடுத்துச் சென்று விட்டனர். மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்