கோவில் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை
கோவில் பூட்டை உடைத்து பொருட்களை மா்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனா்.
விழுப்புரம் அருகே கருங்காலிப்பட்டு கிராமத்தில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகியாக விழுப்புரம் விராட்டிக்குப்பம் சாலையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் உள்ளார். கடந்த 13-ந் தேதி இரவு பூஜைகள் முடிந்ததும் அதன் பூசாரி சங்கர், வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் அவர், நேற்றுமுன்தினம் காலை கோவிலை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது ஆம்பிளிபையர் மற்றும் பித்தளை உண்டியல் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கோவில் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வெங்கடேசன், காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.