கோவைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது

சிறுவாணி அணையில் 4-வது வால்வை திறக்க கேரளா அனு மதி மறுத்தாலும் கோவைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

Update: 2022-06-07 13:54 GMT

கோவை

சிறுவாணி அணையில் 4-வது வால்வை திறக்க கேரளா அனு மதி மறுத்தாலும் கோவைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளா அனுமதி மறுப்பு

சிறுவாணி அணையில் இருந்து கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள 22 வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவு 50 அடி ஆகும்.

ஆனால் கேரள நீர்ப்பாசனத்துறை 45 அடிக்கு மட்டும் நீரை தேக்க அனுமதிக்கிறது. கூடுதலாக தண்ணீர் சேர்ந்தால் அதை திறந்து விடுகிறது.சிறுவாணியில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படும். ஆனால் அது பாதியாக குறைந்து தற்போது 5 கோடியே 10 லட்சம் லிட்டர் மட்டுமே தண்ணீர் எடுக்கப்படு கிறது.

சிறுவாணி அணையில் 4-வது வால்வையும் திறந்து குடிநீர் எடுக்க அனுமதிக்குமாறு கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரி களுக்கு கோவை குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் கடிதம் எழுதினார்கள்.

ஆனால் அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. மேலும் இருமாநிலங்களுக்கு இடையேயான நீர் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்புமாறு கேரள அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தற்போது உள்ள நிலை குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

குடிநீர் தட்டுப்பாடு வராது

தற்போது சிறுவாணி அணையில் 16.29 அடி வரை தண்ணீர் உள்ளது. 4-வது வால்வை திறந்தால் மட்டுமே கூடுதல் தண்ணீர் கிடைக்கும். ஆனாலும் தினமும் 5 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு கோவை நகருக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யும் என்பதால் கோவை நகருக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாது. அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வழக்கமான அளவுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்