குடிநீர் தொட்டியில் விஷம் கலந்ததாக பொதுமக்கள் கூறியதால் பரபரப்பு

மின்மாற்றிகளில் இணைப்பை துண்டித்துவிட்டு தீப்பந்தத்துடன் நின்ற மர்மநபர்கள், குடிநீர் தொட்டியில் விஷம் கலந்ததாக பொதுமக்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 3 லட்சம் லிட்டர் தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.;

Update:2023-05-22 05:06 IST

கடலூர்,

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் அருகில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அடிப்பகுதியில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தன.

நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அப்பகுதியில் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் அவதி அடைந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு மின்தடை குறித்து கேட்டனர்.

அப்போது அவர்கள் நாங்கள் மின்சாரத்தை துண்டிக்கவில்லை என்று தெரிவித்தனர். அதன் பின்னரே அங்குள்ள 2 மின்மாற்றியில் இருந்து வீடுகளுக்கு செல்லும் மின்சாரத்தை சிலர் துண்டித்தது தெரிந்தது. இதையடுத்து அந்த மின்மாற்றி அருகில் பொதுமக்கள் சென்று பார்த்தபோது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் உச்சியில் தீப்பந்தத்தோடு சிலர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பொதுமக்களை கண்டதும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து இறங்கி அங்கிருந்த சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டனர்.

குடிநீரில் விஷம் கலப்பு?

தகவல் அறிந்த போலீசார், பேரூராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டனர்.

அப்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த தேனீக்கள் கூடு தீ வைத்து அழிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் 2 மின்மாற்றிகளில் மின் இணைப்பை துண்டித்து மர்மநபர்கள், தேனீக்கள் கூட்டை அழிப்பது போல் நடித்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள குடிநீரில் விஷத்தை கலந்து இருக்கலாம் என்று பொதுமக்கள் கூறினர்.

குடிநீர் வெளியேற்றம்

இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் பாரதிதாசன் குடிநீர் வினியோகத்துக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டு தொட்டியை சுத்தம் செய்ய ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி தொட்டியில் இருந்த 3 லட்சம் லிட்டர் குடிநீரை வெளியேற்றி தொட்டியை சுத்தம் செய்தனர். முன்னதாக சுகாதார ஆய்வாளர் அன்பரசன் தலைமையிலான சுகாதாரத்துறையினர் தொட்டியில் இருந்து 5 லிட்டர் தண்ணீரை ஒரு கேனில் சேகரித்து நீர் பகுப்பாய்வு சோதனைக்காக சென்னை கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

பகுப்பாய்வு முடிவு வந்ததும் அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்