திராவிடம் குறித்து கவர்னர் பேசியதில் தவறு இல்லை -அண்ணாமலை பேட்டி

திராவிடம் குறித்து தமிழக கவர்னர் பேசியதில் தவறும் இல்லை என்று அண்ணாமலை கூறினார்.

Update: 2023-10-25 23:41 GMT

கோவை,

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை நேற்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடந்தது. இதனால் அந்த யாத்திரையில் பங்கேற்க செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை கோவை சென்றார். பின்னர் அவர் கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முக்கிய தலைவர்களை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைத்து விட்டனர். திராவிடம் குறித்து தமிழக கவர்னர் கூறிய கருத்தில் எந்த தவறும் கிடையாது. சுதந்திர போராட்ட வீரர்கள் பலர் மறைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் எத்தனை பேரின் பெயரை பாடப்புத்தகங்களில் சேர்த்து உள்ளனர் என்பது குறித்து தி.மு.க. வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

யார் என்றே தெரியாது

சுதந்திர போராட்ட வீரர்களை இருட்டடிப்பு செய்துவிட்டு திராவிட தலைவர்களின் பெயர்களை வைக்கிறார்கள். கவர்னரை டி.ஆர்.பாலு எம்.பி. ஒருமையில் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கவர்னர் தனது வேலையை தமிழகத்தில் சரியாக செய்து கொண்டு இருக்கிறார். எனவே அவரை வம்புக்கு இழுக்கும் போக்கை தி.மு.க.வினர் கைவிட வேண்டும்.

என் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய வீரலட்சுமி யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்த ஒரே வீரலட்சுமி சுதந்திரபோராட்ட வீராங்கனைதான். யார் வேண்டும் என்றாலும் ஊழல் பட்டியலை தாராளமாக வெளியிடலாம். நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்குவதால் எந்த பயனும் இல்லை. இந்த தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லலாம். தமிழகத்தில் நீட்தேர்வை அனைவரும் ஏற்றுக்கொண்டு உள்ளனர்.

பிரதமர் வேட்பாளர்

எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறி உள்ளார். அதை கேட்டு எனக்கு சிரிப்புதான் வருகிறது. பிரதமர் பதவிக்கு என்று மரியாதை இருக்கிறது. எனவே 3-வது முறையாக மோடிதான் பிரதமர் வேட்பாளர். தமிழகத்தை சேர்ந்தவர் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றால் அதற்கு தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வர வேண்டும்.

பிரதமர் மோடி தமிழர்களை உயர்த்தி அழகு பார்க்கிறார். திராவிடம் என்பது என்ன என்று தி.மு.க.வினருக்கே தெரியாது. ஆரியர்கள் என்று இந்தியாவில் யாரும் இல்லை. இந்தியா கூட்டணியில் ஆரியர்கள் இருந்தால் அந்த கூட்டணியில் இருந்து தி.மு.க.வெளியே வர வேண்டும்.

கண்டிப்பாக செய்வேன்

நடிகை கவுதமியை நான் சந்தித்தேன். அவர் எனது நண்பர். எவ்வித பிரச்சினையும் இல்லை. கட்சி சார்பில் அவருடைய மனக்குமுறலை நான் கேட்டேன். அவரது வழக்கை தி.மு.க. அரசு கையில் எடுத்து விசாரிக்க வேண்டும். அவருக்கு உதவி செய்ய முடியும் என்றால் நான் கண்டிப்பாக செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்