பா.ஜ.க.வுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றதால் மகிழ்ச்சியில் எனக்கு தூக்கம் வரவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2024-08-19 05:42 GMT

சென்னை,

திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.சங்கர் இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அங்கு பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அதனால் மகிழ்ச்சியில் எனக்கு தூக்கம் வரவில்லை. தி.மு.க.வினரை விட, கலைஞரைப் பற்றி மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சிறப்பாக பேசினார். ராஜ்நாத் சிங் கலைஞரைப் பற்றி பேசியதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கலைஞரைப் பற்றி அப்படி புகழ்ந்து பேச வேண்டும் என்று ராஜ்நாத் சிங்கிற்கு அவசியமே இல்லை. அவர் உள்ளத்தில் இருந்து உண்மையை பேசியுள்ளார்.

அனைத்து தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடும்போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். அண்ணா, கலைஞர் பெயரிலான நாணயத்தில் மட்டும்தான் தமிழ் இடம்பெற்றுள்ளது. கலைஞர் பெயரிலான நாணயத்தில் 'தமிழ் வெல்லும்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதைக்கூட புரிந்துகொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு வாய்த்திருக்கிறார்.

கலைஞர் நாணய வெளியீட்டு விழா தி.மு.க. நிகழ்ச்சி அல்ல; மத்திய அரசின் நிகழ்ச்சி. மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதால் ராகுல் காந்தியை அழைக்கவில்லை. எம்.ஜி.ஆர் நாணயத்தை வெளியிட மத்திய அரசு வர மறுத்ததால் எடப்பாடி பழனிசாமியே வெளியிட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமியை ஒரு முதல்-அமைச்சராக கூட மத்திய அரசு மதிக்கவில்லை.

பா.ஜ.க.வுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமி மாதிரி ஊர்ந்து சென்று பதவி வாங்கும் அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை. தி.மு.க. எதிர்த்தாலும், ஆதரித்தாலும் கொள்கையோடு இருக்கும் என்று இந்திரா காந்தி கூறியுள்ளார். நம் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று அண்ணா மீது ஆணையாக சொல்கிறேன். சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கூட பா.ஜ.க.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க. இரங்கல் கூட்டம் நடத்தியிருக்கிறதா? ஜெயலலிதாவுக்கு கூட்டம் நடத்த முடியாதவர்கள் கலைஞர் விழாவை பார்த்து கேள்வி கேட்பது ஏன்? இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்