தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.;
ஊட்டி
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பயிற்சி முகாம்
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக படிக்க வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதன்படி 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 12-ம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், "புதியன விரும்பு" என்ற தலைப்பில் சிறப்பு கோடைகால வகுப்புகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களுக்கு புதிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்தநிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில், "புதியன விரும்பு-2023" என்ற தலைப்பில் இந்த கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு படிக்க இருக்கும் மாணவர்களுக்கு 5 நாள் பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டம் ஊட்டி லவ்டேல் பகுதியில் உள்ள மத்திய அரசின் லாரன்ஸ் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
சிகரம் தொட வேண்டும்
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பறை இசை அடித்து முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் தமிழகத்தில் 38 மாவட்டங்களை சேர்ந்த 1,140 மாணவ-மாணவிகள் பங்கேற்று உள்ளனர். இங்கு மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் கலை, இலக்கியம், சமூக விழிப்புணர்வு உள்பட 15 வகையான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், இலக்கியவாதிகள் கலந்துகொண்டு பயிற்சி அளிக்கின்றனர்.
பின்னர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊட்டியில் நடைபெறும் இந்த பயிற்சி முகாமிற்கு வந்துள்ள மாணவ-மாணவிகள் தங்களது வாழ்க்கையில் சிகரம் தொட வேண்டும் என்பதற்காக இந்த முகாம் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவிகள் படிக்கும் அரசு பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் ஏற்கனவே திட்டமிட்ட படி, 1 முதல் 5-ம் வகுப்புகள் வரை வருகிற ஜூன் 5-ந் தேதி முதல், 6 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழக தொடக்க பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்தும் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரில் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து 185 ஊராட்சிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் நபார்டு நிதியின் கீழ் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள் விரைவில் நவீனமயமாக்கப்படும்.
2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்து உள்ளனர். இந்த ஆண்டு 80 ஆயிரம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம் நடந்தது. இதில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷ்ணகுமார், கேத்தி பேரூராட்சி தலைவர் ஹேமமாலினி, லாரன்ஸ் பள்ளி முதல்வர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.