சென்னை கிண்டி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் இருந்து புகை கிளம்பியதால் பரபரப்பு
கிண்டி ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயிலில் இருந்து புகை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னையில் மின்சார ரெயில் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்றும், நாளையும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரெயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து 3 மணிக்கு புறப்பட்ட மின்சார ரெயில் ஒன்று கிண்டி ரெயில் நிலையம் அருகே வந்தபோது, ரெயில் பெட்டியின் அடிப்பாகத்தில் இருந்து புகை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்ட நிலையில், பயணிகள் அனைவரும் ரெயிலில் இருந்து வெளியேறினர்.
இதைத் தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில், மின்சார ரெயிலின் பிரேக் பாய்ண்ட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக புகை கிளம்பியது தெரியவந்தது. அந்த பழுது சரிசெய்யப்பட்ட பின்னர் சுமார் 15 நிமிடங்களில் ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் கிண்டி ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.