கால்வாயில் மண் நிரவி சாலை அமைப்பதாக பதாகை வைத்துள்ளதால் பரபரப்பு

கால்வாயில் மண் நிரவி சாலை அமைப்பதாக பதாகை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-14 19:06 GMT

கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் இனியவன் (வயது 8). அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். மாணவன் வீடு அன்னதானக் காவேரி கால்வாய் கரைக்கு தென்பக்கம் இருப்பதால் கரை சீரமைக்கப்பட்ட நிலையில் ஆழமான கால்வாய்க்குள் இறங்கி ஏறி பள்ளிக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிக்கு விடுப்பு கேட்டு விண்ணப்பம் செய்திருந்தான். அதேபோல அவனது பெற்ேறாரும் சாலை வசதி கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்திருந்தனர். ஆனால் சாலை வசதி கிடைக்காத நிலையில் மே மாதம் மாணவன் இனியவன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அமைச்சர் மெய்யநாதன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் கோரிக்கையை கேட்ட பிறகு உடனே பாதை வசதி செய்து கொடுக்க அதிகாரிகளிடம் கூறினார். அதன் பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அன்னதானக் காவேரி கால்வாயை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் அளவீடு செய்துள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து பல மாதங்களாக சாலை வசதி இல்லாமல் மாணவர்கள் பள்ளிக்கும், விவசாய வேலைக்கு வாகனங்கள் கொண்டு வரவும் முடியாத நிலை உள்ளது. மேலும் சாலை வசதி ஏற்படுத்தி தர தாமதம் ஆவதால் 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாரிகள் முன்னிலையில் கால்வாயில் மண் நிரவி சாலை அமைத்துக் கொள்வதாக கால்வாய் கரையோரம் பதாகை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாயை மறித்து பாதை அமைத்துக் கொண்டால் மழைக்காலங்களில் கொத்தமங்கலம் அம்புலி ஆறு அணைக்கட்டிலிருந்து பெரியாத்தாள் ஏரிக்கு தண்ணீர் வருவது தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்