தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை - எடப்பாடி பழனிசாமி

மக்களுக்கு எந்தவொரு புதிய திட்டமும் இல்லை, பெரிய திட்டமும் இல்லை.

Update: 2024-02-19 10:18 GMT

சென்னை,

2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்நிலையில், தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை என தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,

தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை. வழக்கம்போல் ஒவ்வொரு துறைக்கும் தி.மு.க அரசு நிதியை ஒதுக்கி உள்ளது. தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் கடன் உயர்ந்துள்ளது. வரவு, செலவு திட்டத்தில் குளறுபடி உள்ளது.

தி.மு.க அரசு ரூ.8 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. கடன் பெற்றே அவர்கள் ஆட்சியை நடத்துகின்றனர். மக்களுக்கு எந்தவொரு புதிய திட்டமும் இல்லை, பெரிய திட்டமும் இல்லை. தி.மு.க அரசின் கனவு பட்ஜெட் என்பது கானல் நீர் போன்று மக்களுக்கு பயன் தராது.

கிராமப்புறங்களில் சாலைகளை சீரமைக்க ஒதுக்கிய நிதி மிகவும் குறைவு. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை நிறுத்திவிட்டு புதுமைப்பெண், உரிமைத் தொகை திட்டம் கொண்டுவந்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததுபோல, தடுப்பணை கட்டும் திட்டங்கள் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்