தேனி: ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டி ரெயில் மோதி பலி
மதுரை-போடி இடையே சோதனை ஓட்டமாக, 121 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது.
தேனி,
மதுரை-போடி இடையே சிறப்பு ரெயில் இயக்கி தண்டவாள உறுதித்தன்மை குறித்து நேற்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த ரெயில் சுமார் 121 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது. இதற்காக நேற்று பிற்பகலில் மதுரையில் இருந்து ஆய்வு ரெயில் புறப்பட்டு உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக போடி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் போடியில் இருந்து மாலையில் புறப்பட்டு மதுரைக்கு சென்றடைந்தது.
இந்த ஆய்வு ரெயிலில் ரெயில்வே அதிகாரிகளும் பயணம் செய்து ஆய்வு பணியில் ஈடுபட்டனர். மேலும், ரெயில்வே கேட் அமைந்துள்ள பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், ஆய்வு ரெயில் வரும் போது தண்டவாளத்தை யாரும் கடந்து செல்லாமல் தடுக்கவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே சிறப்பு ரெயில் ஆய்வையொட்டி மதுரை-போடி இடையேயான தண்டவாளத்தை கவனத்துடன் கடந்து செல்ல வேண்டும் என்று முன்னதாகவே ரெயில்வே நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மனைவி மீனாட்சி (வயது 60) தனது ஆடுகளை நேற்று வழக்கம் போல அப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். பின்னர் மாலையில் அவர், வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆண்டிப்பட்டி-தேனி இடையே ரெயில் தண்டவாளத்தை ஆடுகளுடன் கடக்க முயன்றார். அந்த சமயத்தில், வேகமாக வந்த ஆய்வு ரெயில் மீனாட்சி மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதேபோல் தண்டவாளத்தில் நின்றிருந்த 6 ஆடுகளும் ரெயிலில் அடிபட்டு இறந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மீனாட்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.