வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு
வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.
கொண்டலாம்பட்டி:
சேலம் அருகே உள்ள அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 55), தர்பூசணி வியாபாரி. இவர் நேற்று வியாபாரத்தை முடித்துவிட்டு இரவில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் ஓடுகள் சில பெயர்க்கப்பட்டு கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜா வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.1¼ லட்சம் ஆகியவற்றை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.