கருங்கல் மார்க்கெட்டில் பெண்ணிடம் 5½ பவுன் நகை அபேஸ்

கருங்கல் மார்க்கெட்டில் காய்கறி வாங்க வந்த பெண்ணிடம் 5½ பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது. இது தொடர்பாக முக கவசம் அணிந்து வந்த இளம்பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-02-12 18:02 GMT

கருங்கல்:

கருங்கல் மார்க்கெட்டில் காய்கறி வாங்க வந்த பெண்ணிடம் 5½ பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது. இது தொடர்பாக முக கவசம் அணிந்து வந்த இளம்பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

5½ பவுன் நகை அபேஸ்

குளச்சல் மாதா காலனி பகுதியை சேர்ந்தவர் ஜான். இவருடைய மனைவி எஸ்பரித்தம்மா (வயது 55). இவர் நேற்று முன்தினம் கருங்கல் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க சென்றார்.

அங்கு தனக்கு தேவையான காய்கறிகளை வாங்கி கொண்டு வீடு திரும்பிய எஸ்பரித்தம்மா, பையை திறந்து பார்த்த போது, அதில் 5½ பவுன் வளையல்கள் வைத்து இருந்த பர்சை காணவில்லை. இதனால் பதறி போன அவர் தான் காய்கறி வாங்கிய கடைக்கு சென்று விசாரித்தார்.

முககவசம் அணிந்த இளம்பெண்

அப்போது கடைக்காரர் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது எஸ்பரித்தம்மா காய்கறி வாங்கிக் கொண்டிருந்த போது அவர் பின்னால் முக கவசம் அணிந்தபடி நின்று கொண்டிருந்த இளம்பெண் எஸ்பரித்தம்மா பையில் இருந்த பர்சை எடுப்பது பதிவாகி இருந்தது.

இதுபற்றி எஸ்பரித்தம்மா கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் காய்கறிகடைக்கு சென்று கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து 5½ பவுன் நகையை அபேஸ் செய்து சென்ற இளம் பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்