மண்ணிவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை கொள்ளை; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
மண்ணிவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
நகை கொள்ளை
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சண்முக நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 40). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக் கொண்டு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 14 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது.
கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து பிரபு ஒட்டேரி போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்து விட்டு, அக்கம்பக்கத்தில் உள்ள குடியிருப்புவாசிகளிடம் விசாரித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையாக வைத்து வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிய கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.