மின்வாரிய அதிகாரி உள்பட 2 பேரின் வீடுகளில் நகை, பணம் திருட்டு

அரியலூரில் மின்வாரிய அதிகாரி உள்பட 2 பேரின் வீடுகளில் புகுந்த மர்ம ஆசாமிகள் நகைகள் மற்றும் பணத்தை திருடி விட்டு தப்பி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2023-09-30 18:37 GMT

மின்வாரிய அதிகாரி

அரியலூர் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மனைவி ரேவதி (வயது 41). இவர் மின்சார துறையில் உதவி மின்பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பழனிவேலுக்கு விபத்து ஏற்பட்டது. இதனால் அவர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் அவரை பார்த்துக்கொள்வதற்காக ரேவதி திருச்சிக்கு சென்றுவிட்டு நேற்று காலை மீண்டும் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரேவதி வீட்டில் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2½ பவுன் சங்கிலி, 2¼ பவுன் கம்மல், வெள்ளி கொலுசுகள் மற்றும் 2 வெள்ளி குத்துவிளக்குகள், லேப்டாப் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டின் பூட்டு உடைப்பு

அரியலூர் புது மார்க்கெட் 4-வது தெருவை சேர்ந்தவர் பாக்யராஜ். இவருடைய மனைவி காயத்ரி (28). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வருகிறார். பாக்யராஜ் நடத்தி வந்த பாத்திரக்கடையை தற்போது காயத்ரி கவனித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் காயத்ரி தனது வீட்டை பூட்டிவிட்டு, உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குழந்தைகளுடன் சென்று விட்டார். பின்னர் மீண்டும் நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

நகை, பணம் திருட்டு

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காயத்ரி, உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டு கட்டுமானத்திற்காக தனியார் நிதி நிறுவனத்தில் காயத்ரி ரூ.1 லட்சம் கடன் வாங்கி பீரோவில் வைத்திருந்தார். அந்த பணத்தையும், 2 பவுன் சங்கிலி, 4 மோதிரங்கள், ¾ பவுன் கம்மல்கள் மற்றும் வெள்ளி கொலுசுகளையும் மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக காயத்ரி அளித்த புகாரின் பேரில் கயர்லாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்