பெருந்துறையில் துணிகரம்; அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து 16½ பவுன் நகை திருட்டு- மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பெருந்துறையில் அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து 16½ பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-05-17 21:26 GMT

பெருந்துறை

பெருந்துறையில் அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து 16½ பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொழில் அதிபர்

பெருந்துறையில் உள்ள சென்னிமலை ரோடு விக்னேஷ் நகரை சேர்ந்தவர் சேகர் (வயது47). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். சேகர் கடந்த 14-ந் தேதி காலை தனது வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் கோபி அருகே தாசப்பகவுண்டன்புதூரில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் 15-ந் தேதி காலை அவரது வீடு திறந்து கிடப்பது குறித்து அக்கம்பக்கத்தினர் சேகருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவர் உடனே தனது வீட்டு்க்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு இரும்பு கம்பியால் நெம்பி திறக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டு உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிலிருந்த தங்க சங்கிலி, தங்க மோதிரம், தங்க தோடுகள் என 11 பவுன் நகைகளை காணவில்லை.

லாரி பட்டறை உரிமையாளர்

இதேபோல் விக்னேஷ் நகரில் வசித்து வரும் லாரி பட்டறை உரிமையாளர் துர்க்கை ராஜ் என்பவரும் கடந்த 14-ந் தேதி அன்று பழனி அருகே உள்ள கீரனூருக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். அவரது வீட்டு கதவின் பூட்டு் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததாக வந்த தகவலின் பேரில் அவரும் வந்து பார்த்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவும் திறக்கப்பட்டு் கிடந்தது. அதிலிருந்த தங்க சங்கிலி, தங்கதோடுகள் என 5½ பவுன் நகைகளை காணவில்லை.

16½ பவுன் நகை திருட்டு

இதுகுறித்து சேகரும், துர்க்கை ராஜும் பெருந்துறை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு் விசாரணை நடத்தினார்கள். 2 வீடுகளிலும் ஆட்கள் இல்லாமல் பூட்டி கிடப்பதை அறிந்த மர்மநபர்கள், சம்பவத்தன்று வீட்டிற்குள் புகுந்து மொத்தம் 16½ பவுன் நகைகளை திருடிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஒரே நாளில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த இந்த திருட்டு சம்பவங்களால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

இந்த நிலையில் இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், வாட்ஸ் அப் செயலி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், 'பெரும்பாலும் ஆட்கள் இல்லாத வீடுகளுக்குள் புகும் மர்மநபர்கள், இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டுமே, தங்களது திருட்டுகளை நடத்துகின்றனர். அந்த நேரத்தில் பொதுமக்கள் தங்களது உடைமைகள் திருட்டு போவதை தடுத்திட ஒருங்கிணைந்து இரவு காவலாளிகளை நியமனம் செய்து போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்