கடத்தூர் அருகேபள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 18 பவுன் நகை திருட்டுமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Update: 2022-12-29 18:45 GMT

மொரப்பூர்:

கடத்தூர் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 18 பவுன் நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பள்ளி தலைமை ஆசிரியை

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள திண்டலானூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவருடைய மனைவி கோமதி (வயது 56). இவர் திண்டலானூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சக்கரவர்த்திக்கு கண் பரிசோதனை செய்வதற்காக கோமதி தனது மகனுடன் காரில் தர்மபுரிக்கு சென்றார். அங்கு கண் பரிசோதனை முடிந்த பின்னர் மறுநாள் கண் பிரச்சினைக்காக மீண்டும் டாக்டர் வர சொல்லவே மீண்டும் 3 பேரும் தர்மபுரிக்கு சென்று அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கினர். இதையடுத்து நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திண்டலானூரில் உள்ள தங்களது வீட்டுக்கு வந்தனர்.

வலைவீச்சு

அப்போது வீட்டின் கேட்டில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கைவரிசையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து கோமதி கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 18 பவுன் நகை திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்