பாப்பிரெட்டிப்பட்டி அருகே துணிகரம்: மாமியார், மருமகளை கத்தியால் மிரட்டி 7 பவுன் நகை கொள்ளை-முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

Update: 2022-12-20 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி அருகே துணிகரம்:

மாமியார், மருமகளை கத்தியால் மிரட்டி 7 பவுன் நகை கொள்ளை

முகமூடி கொள்ளையர்கள் கைவரிசைபாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாமியார், மருமகளை கத்தியால் மிரட்டி 7 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாமியார், மருமகள்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிடி கோட்டமேடு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி செல்வம் (வயது 60), தாய் பெருமாயி அம்மாள் (90). கணேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவருடைய மகன் சத்யராஜ் (39), சென்னையில் குடும்பத்துடன் தங்கியிருந்து என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

இதனால் செல்வம், இவருடைய மாமியார் பெருமாயி அம்மாள் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார்கள்.

திருட்டு முயற்சி

இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி செய்தனர். இதுகுறித்து செல்வம் பொம்மிடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதுடன், வீடு தனியாக உள்ளதால் அங்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அறிவுறுத்தினர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு செல்வம் மற்றும் பெருமாயி அம்மாள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டை உடைக்கும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் தனது செல்போன் மூலம் பொம்மிடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

முகமூடி கொள்ளையர்கள்

இதனிடையே முன்பக்க கேட்டை உடைத்து கொண்டு முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட கொள்ளை கும்மல் கத்தி, கடப்பாறை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்தது. அவர்கள் செல்வத்திடம் இருந்து செல்போனை பறித்தனர். பின்னர் பெருமாயி அம்மாளின் கழுத்தில் கத்தியை வைத்ததுடன், செல்வத்தின் கையை பின்புறமாக சேர்த்து வைத்து துணியால் கட்டினர். மேலும் வாயையும் துணியால் கட்டினர்.

இதையடுத்து அந்த கும்பல் வீட்டில் இருந்த ஒவ்வொரு அறையாக சென்று பணம், நகையை தேடினர். ஆனால் அவர்களின் கைகளில் நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் சிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முகமூடி கொள்ளையர்கள் செல்வத்தின் கழுத்தில் கத்தியை வைத்து 'நகை, பணம் எங்குள்ளது' என்று கேட்டு கொலை செய்வதாக மிரட்டி, அவரை தாக்கினர். மேலும் பெருமாயி அம்மாளை கொன்று விடுவதாக மிரட்டினர். பயந்துபோன செல்வம் வீட்டில் நகை, பணம் இல்லை என்று கொள்ளையர்களிடம் கூறினார்.

7 பவுன் நகைகளை பறித்தனர்

பின்னர் கொள்ளையர்கள் செல்வம் அணிந்திருந்த தங்க சங்கிலி, கம்மல், வளையல் உள்ளிட்ட 7 பவுன் நகைகளை பறித்தனர். மேலும் அவருடைய செல்போனையும் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனிடையே செல்வம் கை மற்றும் வாயில் கட்டப்பட்டிருந்த துணியை கழட்டினார். பின்னர் அவர் அருகில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வம், அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், பொம்மிடி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் செல்வம் மற்றும் பெருமாயி அம்மாளிடம் விசாரணை நடத்தினர்.

மோப்ப நாய்

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டின் கதவு, பீரோ, அலமாரி உள்ளிட்ட பகுதிகளில் பதிவான கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து தர்மபுரியில் இருந்து மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்து, அருகில் உள்ள மாட்டு கொட்டகை, மஞ்சள் தோட்டம் வழியாக சேலம் செல்லும் சாலையில் நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்களை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி கும்பல் குறித்து தங்களது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த கொள்ளை குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த ஆண்டு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இதேபோன்று வீடு ஒன்றில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது அதேபோன்று ஒரு சம்பவம் நடந்ததுள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்