பரமக்குடி வைகை ஆற்றில் மணல் திருட்டு

பரமக்குடி வைகை ஆற்றில் மணல் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-12-04 22:20 IST

பரமக்குடி, 

பரமக்குடி வைகை ஆற்றில் கடந்த சில நாட்களாக வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் தற்போது குறைந்து வருகிறது. இதை பயன்படுத்தி பெருமாள் கோவில் படித்துறை வைகை ஆற்றில் மணல் திருடர்கள் திருட்டுத்தனமாக டிராக்டர்களில் மணல் அள்ளிச் சென்றுள்ளனர். அவர்கள் மணல் திருடிய இடம் பாதாள பள்ளமாக உருவாகி உள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் பரமக்குடி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் சோதனை செய்தனர். அப்போது இரவில் டிராக்டர் மூலம் திருட்டுத்தனமாக மணல் அள்ளிச் சென்றது பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை பதிவிறக்கம் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணல் திருடர்கள் மீது வருவாய்த்துறையினரும் காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மணல் திருடிய வாகனத்தை கைப்பற்றி அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறத்தமிழர் சேனை அமைப்பின் தலைவர் பிரபாகரன் பரமக்குடி சப்- கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்