குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.40 ஆயிரம் அபேஸ்-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி:
குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.40 ஆயிரத்தை அபேஸ் செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லாவி அருகே உள்ள பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் (வயது 27). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 4-ந் தேதி இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறப்படடிருந்தது.
இதையடுத்து அதில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு விக்னேஷ்குமார் பேசினார். அவரிடம் பேசிய நபர், குறைந்த வட்டியில் பணம் தருவதாகவும், அதற்கான நடைமுறை செலவுகளுக்காக ரூ.40 ஆயிரத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
போலீசார் விசாரணை
இதையடுத்து விக்னேஷ்குமார் அந்த நபர் கொடுத்த வங்கி கணக்கில் ரூ.40 ஆயிரம் செலுத்தினார். ஆனால் அந்த நபர் கூறியபடி கடன்தொகை வழங்கப்படவில்லை. இதனால் சநதேகம் அடைந்த விக்னேஷ்குமார், அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விக்னேஷ்குமார், இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.