மூதாட்டி உள்பட 2 பேரிடம் நகை திருடிய பெண் கைது

நல்லம்பள்ளி பகுதியில் மூதாட்டி உள்பட 2 பேரிடம் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-26 15:28 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே ஏலகிரியான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பவுனு (வயது46). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தர்மபுரிக்கு வேலைக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு பஸ்சில் சென்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் நகையை பறித்து சென்றனர். இதேபோல் நல்லம்பள்ளி பஸ் நிறுத்தம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாமிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை மர்ம பெண் ஒருவர் பறித்து சென்றார். இதுகுறித்த புகார்களின் பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் தர்மபுரியில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சேலம் பெண்கள் சிறையில் இருந்து வரும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பள்ளிப்பட்டியை சேர்ந்த பாரதி (32) என்ற பெண், பவுனு, மூதாட்டி ஆகியோரிடம் 6 பவுன் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை ஒரு நாள் காவலில் எடுத்து அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பவுனு, மூதாட்டியிடம் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பாரதியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 6 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்