காரிமங்கலம் அருகேதொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

Update: 2023-07-09 19:00 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு போனது.

கூலித்தொழிலாளி

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சவுளூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள் (வயது 31). இவர் பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் 30-ந் தேதி ஊரில் நடந்த திருவிழா மற்றும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டுக்கு வந்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் அருள், அவருடைய மனைவி ஆகியோர் தங்களது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் தர்மபுரி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது வீட்டில் அருளின் தாய் மட்டும் இருந்தார்.

நகை திருட்டு

இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் அருளின் தாய் ஊரில் திருவிழா நடைபெற்றதால் அதனை காண வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்றார். பின்னர் காலை 11 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து போன் மூலம் அருளிடம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வீட்டுக்கு விரைந்து வந்த அருள் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்