என்ஜினீயர் வீட்டில் திருட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்து பொதுமக்கள் தர்ம அடி

கொங்கணாபுரம் அருகே என்ஜினீயர் வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து திருடமுயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபரின் கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-10-17 19:45 GMT

எடப்பாடி:-

கொங்கணாபுரம் அருகே என்ஜினீயர் வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து திருடமுயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபரின் கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

என்ஜினீயர்

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம் கச்சுப்பள்ளி கிராமம், இலவம்பாளையம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 28). இவருடைய மனைவி சத்யா (23). கார்த்தி தனது பெற்றோருடன் இலவம்பாளையம் பகுதியில் உள்ள தனது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். என்ஜினீயரான கார்த்தி தற்போது சங்ககிரி-ஓமலூர் நான்கு வழிச்சாலை திட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று கார்த்தி தனது மனைவி சத்யாவை அய்யம்பாளையத்தில் உள்ள அவரது தாயார் வீட்டில் விட்டு விட்டு, தனது வழக்கமான பணிக்காக சங்ககிரிக்கு சென்று இருந்தார். கார்த்தியின் பெற்றோர் எட்டிகுட்டைமேடு பகுதியில் உள்ள தறிக்கூடத்திற்கு வேலைக்கு சென்று இருந்தனர்.

இந்த நிலையில், வேலைக்கு சென்று இருந்த கார்த்தி திடீரென வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், அவர் தன் வீட்டில் நிறுத்தி இருந்த காரை எடுப்பதற்காக தனது உறவினர் தனுஷ் என்பவருடன், நண்பகல் நேரத்தில் வீட்டுக்கு திரும்பி உள்ளார்.

பூட்டை உடைத்து...

அப்போது கார்த்தியின் வீட்டு முன்பு பிரதான சாலையில் சிவப்பு நிற ஸ்கூட்டரில் வாலிபர் ஒருவர் நின்று இருந்தார். அவர் கார்த்தியை கண்டவுடன் திடீரென பதற்றத்துடன் வேகமாக வண்டியில் அங்கிருந்து புறப்பட முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த கார்த்தி தனது வீட்டுக்குள் நுழைந்த போது அங்கு வீட்டின் பிரதான கதவில் உள்ள பூட்டை, வாலிபர் ஒருவர் உடைத்து கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக கார்த்தி, தனுஷ் இருவரும் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். பொதுமக்கள் வருவதை கண்ட மர்ம நபர், அருகில் உள்ள விவசாய வயலில் குதித்து தப்ப முயன்றார். தப்பியோட முயன்ற வாலிபரை துரத்தி பிடித்த அப்பகுதி மக்கள், தர்ம அடி கொடுத்து கொங்கணாபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

சிவகங்கை வாலிபர் கைது

போலீசாரின் தீவிர விசாரணையில், கொங்கணாபுரம் அருகே என்ஜினீயர் வீட்டில் திருட முயன்ற வாலிபர் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் குமார் (22) என்பதும், அவர் தனது கூட்டாளியான குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த இம்ரானுடன் சேர்ந்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து குமாரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், தப்பி ஓடிய இம்ரானை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் கொங்கணாபுரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்