சித்திரைத்திருவிழா ஆயிரம் பொன் சப்பரம் செய்யும் பணி
சித்திரைத்திருவிழா ஆயிரம் பொன் சப்பரம் செய்யும் பணி தொடங்கியது;
உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவிற்கு பல்வேறு தனி சிறப்புகள் உண்டு. அதில் ஒன்றுதான் ஆயிரம் பொன் சப்பரம். உலகமே வியக்கும் வண்ணம் திருவிழாவை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் மன்னர் திருமலை நாயக்கர் வைகை ஆற்றில் எழுந்தருளும் கள்ளழகருக்கு பிரமாண்டமாக சப்பரம் செய்ய வேண்டும் என்று எண்ணி ஆயிரம் பொன் செலவில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், 3 மாதங்கள் இரவு பகலாக வேலை செய்து மிகவும் பிரமாண்டமாக ஒரு சப்பரம் செய்தனர்.
ஆயிரம் பொன் செலவில் செய்ததால் அந்த சப்பரத்திற்கு ஆயிரம் பொன்சப்பரம் என்றே பெயரானது. அந்த பிரமாண்ட ஆயிரம் பொன் சப்பரத்திற்குள் தங்கக்குதிரையில் கள்ளழகர் எழுந்தருளி, இந்த சப்பரத்துடன்தான் வைகை ஆற்றுக்குள் எழுந்தருள்வார்.
காலப்போக்கில் மாறி தற்பொழுது தங்க குதிரையில் மட்டுமே கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் எழுந்தருள்கிறார். இருந்தாலும் இந்த ஆயிரம் பொன் சப்பரம் செய்யும் பணியை சம்பிரதாயமாக அழகர் கோவில் நிர்வாகம் ஆண்டுதோறும் செய்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சப்பரம் முகூர்த்தமாக பணி தொடங்கியது. இந்த ஆண்டு சம்பிரதாயமாக அந்த சப்பரத்தை சிறிதாக செய்யாமல், பழங்கால முறைப்படி பாரம்பரியம் மாறாமல் பிரமாண்டமாக செய்யும் நோக்கத்தோடு, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது,
அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த சக்கரங்களையும் அதன் கட்டைகளையும் புதுப்பித்து நேற்று அந்த சக்கரத்தை தல்லாகுளம் சப்பரத்தடி கருப்பசாமி கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இன்னும் சில நாட்களுக்குள் சப்பர பணிகள் செய்து முடிக்க கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்து உள்ளனர்.