கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்

கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

Update: 2023-06-28 18:52 GMT

புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ``தமிழகத்தின் வளர்ச்சிக்காக தன்னையே ஒப்படைத்து கொண்டு கல்வி, பொருளாதாரம், சமூக நீதி இவை அனைத்தும் உயர்வுக்கு காரணமாக இருந்தவர் கருணாநிதி. தமிழ்நாட்டில் ஓய்வே பெறாமல் தொடர்ந்து 13 முறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 5 முறை முதல்-அமைச்சராக பதவியேற்ற காலத்தில் தமிழ்நாட்டில் எண்ணிலடங்கா திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழ்நாடு என்ற உயர்வுக்கு காரணமாக இருந்தவர் கருணாநிதி. அவரது நினைவாக பேனா நினைவு சின்னம் சென்னை மெரினா கடல் பகுதியில் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான பணிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அமைச்சர் மேற்பார்வையில் விரைவில் தொடங்கும்'' என்றார். தொடர்ந்து நடிகர் விஜய் தொடர்பான கேள்விக்கு, தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. இந்தியாவில் பல மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கிற நிலையில் தமிழ்நாடு தொடர்ந்து வெற்றி நடைபோடும் என்றார். முன்னதாக புதுக்கோட்டை சந்தைபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் நிதி உதவியுடன் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்