அண்ணா விளையாட்டு மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுவதையொட்டி அண்ணா விளையாட்டு மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

Update: 2022-08-17 19:46 GMT

நாகர்கோவில்:

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுவதையொட்டி அண்ணா விளையாட்டு மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் 1-ந் தேதி வரை முகாம் நடக்கிறது. அக்னிபத் திட்டத்தில் சேர குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், திண்டுக்கல் உள்பட 17 மாவட்டங்களை சேர்ந்த இளைஞா்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். சுமார் 36 ஆயிரம் இளைஞர்கள் முகாமில் கலந்து கொள்ள உள்ளனர். ஒவ்வொரு நாளும் 3 ஆயிரம் பேர் என்ற அடிப்படையில் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை நேரத்தில் தேர்வு நடந்தால் போக்குவரத்து நெருக்கடி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் இரவு நேரத்தில் ஆட்கள் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை முகாம் நடத்தப்பட உள்ளது. ஆள் சோ்ப்பு முகாமுக்கான பெயர் பதிவு செய்யும் வசதி 3 இடங்களில் அமைக்கப்பட உள்ளன. உழவர் சந்தை, அண்ணா ஸ்டேடியம் நீச்சல் குளம் செல்லும் பாதை, மாநகராட்சி புதிய அலுவலக கட்டிட பகுதி என 3 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பந்தல் அமைக்கும் பணி

இதனையொட்டி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கின்றன. பந்தல் அமைத்தல், மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக பெயர் பதிவு செய்யும் இடங்களில் பந்தல் அமைக்கும் பணி நேற்று தீவிரமாக நடந்தது. மேலும் விளையாட்டு மைதானத்தில் முகாமுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுவதால் அண்ணா விளையாட்டு அரங்கம் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு காலை மற்றும் மாலையில் நடைபயிற்சி, விளையாட்டு பயிற்சி செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்