மகளிர் உரிமைத் தொகை கிடைத்தது வரப்பிரசாதம்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு ரூ.1,000 பெற்ற இல்லத்தரசிகள் இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.;

Update:2023-09-16 01:15 IST

மகளிர் உரிமைத்தொகை

தமிழக அரசு சார்பில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆனால் அதற்கு முன்னதாக அதாவது நேற்று முன்தினமே பெரும்பாலான பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டது. இதனால் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேர்வு செய்யப்பட்ட அனைத்து பெண்களின் வங்கி கணக்கிலும் நேற்று ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் தேர்வுசெய்யப்பட்டு, ரூ.1,000 பெற்ற திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த இல்லத்தரசிகள் கூறியதாவது:-

பயனுள்ளதாக இருக்கும்

திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் பகுதியை சேர்ந்த காசிசேகர் என்பவரது மனைவி கனகா கூறுகையில், எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. நான் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுய உதவிக்குழுவால் நடத்தப்படும் சிற்றுண்டி கடையில் பணியாற்றி வருகிறேன். நானும், எனது கணவரும் சம்பாதிக்கும் பணம் மாதசெலவிற்கு போதுமானதாக இல்லை. தற்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் நான் தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். எனக்கு இந்த திட்டத்தின் மூலம் அரசால் மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,000 கிடைக்க உள்ளது. இந்த மாதத்திற்கான பணம் எனது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ள குறுஞ்செய்தி செல்போனில் வந்ததை கண்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த ஆயிரம் ரூபாய் எனது குடும்பத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

தேனிமலை பகுதியை சேர்ந்த புவனம்மாள் ( வயது 70) கூறுகையில், எனக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. 2 மகன்களும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அரசால் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் என்னை தேர்வு செய்து உள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட ரூ.1,000 எனது வங்கி கணக்கிற்கு வந்ததற்கான குறுஞ்செய்தி எனது மகனின் செல்போன் எண்ணிற்கு வந்தது. மாதந்தோறும் ரூ.1,000 வழங்கபடுவதால் எனது குடும்ப செலவிற்கு பெரும் உதவியாக இருக்கும். முதல்- அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

வரப்பிரசாதம்

ஆரணி டவுன் வராக மூர்த்தி தெருவை சேர்ந்த பச்சையம்மாள் கூறுகையில், நான் கணவனை பிரிந்து, கூலி வேலை செய்து குடும்பத்தை கவனித்து வருகிறேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு மகன் உள்ளனர். தமிழக அரசு தற்போது மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.1,000 எனது வங்கி கணக்கில் கிடைக்கப்பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தொகை என் குடும்ப செலவுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றார்.

போளூர் அல்லி நகர் ஈஸ்வரன் கோவில் தெருவில் வசிக்கும் விவசாய கூலி தொழிலாளி வி.மேனகா கூறுகையில், எனது வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டதற்கான குறுஞ்செய்தியை பார்த்ததும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். எனது கணவர் டீ கடையில் வேலை செய்கிறார். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி அந்த பணத்தை தபால் அலுவலகத்தில் சேமிக்க தொடங்குவேன். என்னை போன்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு இந்த உரிமைத்தொகை வரப்பிரசாதமாக இருக்கும். முதல்-அமைச்சருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

சொல்லாததை செய்துள்ளார்

ஆற்காடு வட்டம் வளவனூர் கிராமத்தை சேர்ந்த சுமிதா கூறுகையில், எனது மகன் மாற்றுத்திறனாளியாக உள்ளார். எனவே அவரை பார்த்துக் கொள்வதற்கு உதவி தேவைப்படுகிறது. ஆனால் கணவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நான் மட்டுமே வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கடுமையான பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தை நடத்துவதற்கு போதுமான வருமானம் இல்லாமல் தவித்து வரும் நிலையில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கும் திட்டம் மூலம் இந்த மாதத்திற்கான தொகை எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மிகவும் மோசமான சூழலில் குடும்பம் உள்ளதால் எனக்கு கிடைக்கும் இந்த தொகை குடும்பத்தை நடத்த உதவியாக இருக்கும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

திமிரியை சேர்ந்த நந்தினி ஜீவரெத்தினம் கூறுகையில், கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை 15-ந் தேதி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கூறியிருந்தார். ஆனால் 14-ந் தேதியே வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு விட்டது. இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். எங்களின் குடும்ப செலவுகளுக்கு இந்த 1,000 ரூபாய் பெரிதும் உதவியாக இருக்கும். இதன் மூலம் முதல்-அமைச்சர் சொல்லாததையும் செய்து காட்டி உள்ளார் என்றார்.

வாழ்க்கை தரம் உயரும்

திருப்பத்தூரை சேர்ந்த முனியம்மாள் கூறுகையில், நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு கிடைக்கும் வருமானம் போதிய அளவு இல்லாததால் குடும்ப செலவுகளை ஈடுகட்ட மிகவும் சிரமப்பட்டு வந்தேன். கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் கிடைத்த இந்த பணம் எனது குடும்ப செலவுகளை மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும். இதன் மூலம் எனது வாழ்க்கை தரம் உயரும். இதை அளித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த உஸ்னா ஜபீன் கூறுகையில், நான் இல்லத்தரசியாக உள்ளேன். எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. கடந்த 4 நாட்களாக சிலிண்டர் வாங்கக்கூட பணம் இல்லாமல் இருந்தேன். தற்போது மகளிர் உரிமைத்திட்டத்தின் மூலம் எனது வங்கிக்கணக்கில் ரூ.1000 வந்தது பேரின்பமாக இருந்தது. உடனடியாக அந்த பணத்தை எடுத்து சிலிண்டர் வாங்கி விட்டேன். கஷ்டமான காலத்தில் இந்த பணம் எங்களுக்கு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நாங்கள் நன்றி கடன் பட்டுள்ளோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்