ஓவேலியில் காட்டு யானைகள் அட்டகாசம்
ஓவேலியில் கொட்டகை, வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் விரட்டினர்.
கூடலூர்
ஓவேலியில் கொட்டகை, வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் விரட்டினர்.
கொட்டகை சேதம்
கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருகிறது. தொடர்ந்து வீடுகள், விவசாய பயிர்களை சேதப்படுத்துகிறது. இந்த நிலையில் ஓவேலி பேரூராட்சி சூண்டி அருகே பாரம் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் நள்ளிரவு வந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்து அங்கிருந்த கொட்டகையை சேதப்படுத்தியது.
பின்னர் அருகே உள்ள தொழிலாளர்களின் வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து 3 பேரின் வீடுகளை சேதப்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். இதைத் தொடர்ந்து காட்டு யானைகள் அங்கிருந்து சென்றது. தொடர்ந்து பாரம் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டிருந்தது. இது குறித்து வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
வனத்துறையினர் விரட்டினர்
இதைத்தொடர்ந்து ஓவேலி வனச்சரகர் யுவராஜ், வனவர் சுதீர்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் வன ஊழியர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டினர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானைகள் கூட்டம் கடந்த சில தினங்களாக சில வீடுகளை சேதப்படுத்தி உள்ளது. எனவே காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் தரப்பில் கேட்டபோது, பச்சை தேயிலையை பறித்து மூட்டையாக கட்டி வைக்கக்கூடிய கொட்டகை, 2 வீடுகளில் மேற்கூரையை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளது. தொடர்ந்து ஊருக்குள் வராமல் தடுக்க கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.