குடிசை வீட்டு சுவர் இடிந்து விழுந்து வாய் பேச முடியாத அக்காள்-தங்கை பலி

கந்திலி அருகே குடிசை வீட்டு சுவர் இடிந்து விழுந்து காதுகேட்காத மற்றும் வாய்பேச முடியாத அக்காள்- தங்கை பலியானார்கள். அரசு வீடு வழங்காததால்தான் அவர்கள் இறந்ததாக உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-06-24 18:11 IST

கந்திலி அருகே குடிசை வீட்டு சுவர் இடிந்து விழுந்து காதுகேட்காத மற்றும் வாய்பேச முடியாத அக்காள்- தங்கை பலியானார்கள். அரசு வீடு வழங்காததால்தான் அவர்கள் இறந்ததாக உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாய்பேச முடியாத அக்காள்-தங்கை

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் மண்டலநாயனகுண்டா ஊராட்சி மேல் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னம்மா (வயது 102). இவரது மகள்கள் நாகம்மாள் (72), சுந்தரி (65), இவர்கள் இருவரும் காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். இதனால் இவர்களுக்கு திருமணமாகவில்லை.

தாய், மகள்கள் ஆகிய 3 பேரும் தங்களுக்கு சொந்தமான இடத்தில் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த வாரமாக பெய்த தொடர் மழை காரணமாக குடிசை வீட்டின் முன் சுவர்கள் நனைந்து ஈரமாக இருந்துள்ளது. 23-ந் தேதி இரவு வழக்கம்போல 3 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

சுவர் இடிந்து விழுந்து பலி

24-ந் தேதி அதிகாலை வீட்டின் சுவர்கள் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த நாகம்மாள், சுந்தரி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சின்னம்மா உயிர் தப்பினார். சுவர் இடிந்து விழுந்த சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து உடனடியாக ஊராட்சி மன்றத் தலைவர் டி.ஜி.முருகனுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர், இடிந்து விழுந்த சுவர்களை அப்புறப்படுத்தி இருவரின் உடல்களையும் மீட்டனர்.

அரசு வீடு வழங்காததால் மறியல்

சின்னம்மா குடிசை வீட்டிற்கு பதில் அரசு வீடு கேட்டு 3 முறை பதிவு செய்தும் வீடு வழங்காததால், குடிசை வீட்டில் வசித்து வந்த இவர்கள் சுவர் இடிந்து விழுந்து இறந்துவிட்டதாகக்கூறி அவர்களுடைய உறவினர்கள் கந்திலி ஊராட்சி ஒன்றிய வட்டாரவளர்ச்சி அலுவலர்கள்மீது குற்றம் சாட்டி மறியலில் ஈடுபட்டனர். அவர்களை ஊராட்சி மன்ற தலைவர் முருகன் சமாதானம் செய்தார். இதுபற்றி கந்திலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுவர் இடிந்து காது கேளாத வாய் பேசா முடியாத 2 சகோதரிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்