குடிநீர் கேட்டு பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் திடீர் முற்றுகை

சாத்தான்குளம் அருகே குடிநீர் கேட்டு சாஸ்தாவிநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் நேற்று திடீரென முற்றுகையிட்டனர்.

Update: 2023-05-23 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே குடிநீர் கேட்டு சாஸ்தாவிநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் நேற்று திடீரென முற்றுகையிட்டனர்.

முற்றுகை போராட்டம்

சாத்தான்குளம் யூனியன் சாஸ்தாவிநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வாலத்தூரில் பஞ்சாயத்து சார்பில் ஆழ்துளை கிணறு மூலமும், கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 2 மாதமாக போதிய குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றியதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பஞ்சாயத்து சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லையென கூறி கடந்த வாரம் சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷிடம் முறையிட்டனர். அவர் விரைவில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதி அளித்ததன்பேரில் கலைந்து சென்றனர்.

பேச்சுவார்த்தை

அதன்பின்னரும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படாததால் வாலத்தூரைச் சேர்ந்த கிராம மக்கள் 50-க்கு மேற்பட்டோர் நேற்று சாஸ்தாவிநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்ததும் பஞ்சாயத்து தலைவர் திருக்கல்யாணி, துணைத் தலைவர் ராபின்சன், தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நெல்சன், முகம்மது ரபீக், குரூஸ்மைக்கேல் ஆகியோர் வந்து கிராம மக்களிடம் பேச்ச வார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில், ஆழ்துளை கிணறு புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. அதில் மோட்டார் பொருத்தி உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்