கொட்டாம்பட்டி
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யாபட்டி ஊராட்சியில் உள்ள செக்கடிபட்டி கிராமத்திற்கு செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திலான சாலையை சீரமைக்க பழைய சாலையை பெயர்த்துள்ளனர். ஒரு மாதம் ஆகியும் சாலையை சீரமைக்காமல் அப்படியே விட்டு விட்டு சென்றதால் அப்பகுதி மக்கள் சாலையில் செல்ல அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், அவசர மருத்துவ உதவி கூலி வேலைக்கு செல்வோர், மோட்டார் சைக்கிளில் செல்வோர் விபத்துக்களை சந்தித்து வருகின்றனர். மேலும் கிராமத்திற்கு வரக்கூடிய அரசு பஸ்சும் சாலை சீரமைக்கப்படாததால் சில நேரங்களில் வருவதில்லை.
இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.