வேன் கவிழ்ந்து 29 பேர் காயம்
வேப்பூர் அருகே வளைகாப்பு விழாவுக்கு சென்றபோது டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்தில் 29 பேர் காயமடைந்தனர்.
வேப்பூர்,
வளைகாப்பு விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சந்திரராஜன் (வயது 25). இவரது மனைவிக்கு திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தில் நேற்று மதியம் வளைகாப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை 8 மணிக்கு சந்திரராஜனின் உறவினர்கள், கிளியூரில் இருந்து ஒரு வேனில் ஸ்ரீரங்கத்திற்கு புறப்பட்டனர். வேனை உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சுரேஷ் (36) என்பவர் ஓட்டினார்.
29 பேர் காயம்
கடலூர் மாவட்டம் சேப்பாக்கம்- வேப்பூர் இடையே வந்தபோது, வேனின் பின்பக்கமுள்ள வலதுபுற டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டிரைவர் சுரேஷ் மற்றும் வேனில் வந்த கலியன் (80), சிவக்குமார்(28) அஞ்சலை(35) உள்பட 29 பேர் காயமடைந்தனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை
இது குறித்த தகவலின் பேரில் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பொதுமக்கள் உதவியுடன் 29 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கலியன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், மற்றவர்கள் உளுந்தூர்பேட்டை தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே விபத்துக்குள்ளான வேன், கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.