நடுரோட்டில் வேன் தீப்பிடித்து எரிந்தது

நெல்லையில் நடுரோட்டில் வேன் தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணம் செய்த 15 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2023-02-18 20:57 GMT

நெல்லையில் நடுரோட்டில் வேன் தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணம் செய்த 15 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தீர்த்தம் எடுக்க சென்றனர்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் இருந்து கோவில் கொடை விழாவுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக பொதுமக்கள் சுமார் 15 பேர் கன்னியாகுமரிக்கு நேற்று அதிகாலையில் வேனில் புறப்பட்டனர்.

வாசுதேவநல்லூர் சேனையர் நாட்டாண்மை தெருவை சேர்ந்த கணேசன் என்பவர் வேனை ஓட்டிச்சென்றார். நெல்லை டக்கரம்மாள்புரம் போலீஸ் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது வேனில் இருந்து திடீரென புகை வந்தது.

தீப்பிடித்து எரிந்தது

உடனடியாக சுதாரித்துக்கொண்ட டிரைவர் கணேசன் வேனை நடுரோட்டில் நிறுத்திவிட்டு அதில் இருந்த பயணிகளை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். அவர்கள் அனைவரும் வேனை விட்டு இறங்கி சற்று தொலைவில் சென்றனர்.

சிறிது நேரத்திலேயே அந்த வேன் தீப்பற்றி மளமளவென எரியத்தொடங்கியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே டிரைவர் கணேசன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி, பெருமாள்புரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவபாலன் ஆகியோரிடம் தெரிவித்தார்.

பரபரப்பு

போலீசார், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாவட்ட அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர் வெட்டும்பெருமாள், நிலைய அலுவலர் ராஜா ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வேனில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். எனினும் வேன் முழுவதுமாக எரிந்து நாசமானது. தீப்பிடிப்பதற்கு முன்பு 15 பேரும் கீழே இறங்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்