பாதாள சாக்கடை திட்ட பணியை விரைந்து முடிக்க வேண்டும்

விழுப்புரம் நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-09-12 16:01 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 5 ஊராட்சிகளான காகுப்பம், பானாம்பட்டு, எருமனந்தாங்கல், சாலாமேடு, வழுதரெட்டி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.251.67 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மந்தகதியில் நடப்பதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையினால் பல இடங்களில் சேறும், சகதியுமாக காணப்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இணைந்து இப்பணிகளை விரைவுப்படுத்திட வேண்டுமென நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெறும் பகுதியை சேர்ந்த கவுன்சிலர்கள் பங்கேற்று முன்னுரிமை அடிப்படையில் பணிகளை முடிக்க வலியுறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து நகராட்சியில் புதியதாக இணைக்கப்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று விழுப்புரம் தந்தை பெரியார் நகர், சாலாமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்கவும், தோண்டப்படும் மண்களை அகற்றி உடனடியாக சிமெண்டு சாலைப்பணிகளை மேற்கொள்ள வேண்டுமென ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, நகரமன்ற கவுன்சிலர்கள் புருஷோத்தமன், சங்கர், சிவக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்