பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்

நெல்லை மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று துணை மேயர் கே.ஆர்.ராஜூவிடம் கவுன்சிலர் மனு கொடுத்தார்.

Update: 2023-09-26 19:00 GMT

நெல்லை மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று துணை மேயர் கே.ஆர்.ராஜூவிடம் கவுன்சிலர் மனு கொடுத்தார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். துணை ஆணையாளர் தாணுமூர்த்தி, செயற்பொறியாளர் வாசுதேவன், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை மாநகராட்சி 55-வது வார்டு கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன் கொடுத்த மனுவில், "நெல்லை மாநகராட்சி கூட்டம் கடந்த மாதம் நடைபெறவில்லை. இந்த மாதமும் இதுவரை நடைபெறவில்லை. இதனால் மக்கள் குறைகளை மன்ற கூட்டங்களில் பேசி பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாத காரணத்தால் ஏராளமான திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அடிப்படை தேவையான குடிநீர் சரிவர கிடைக்காததற்கு காரணம் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றாததே ஆகும். எனவே உடனடியாக மாநகராட்சி கூட்டத்தை நடத்தி, பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

திராவிடர் தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் திருக்குமரன் தலைமையில் கொடுத்த மனுவில், "விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை கரைக்கும் பணியில் தச்சநல்லூர் மண்டலம் வண்ணார்பேட்டை பகுதியில் தூய்மை பணியில் வடிவேல்முருகன் என்பவரை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி உள்ளனர். இதனால் அவர் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அவரை கட்டாயப்படுத்திய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

சீரான குடிநீர்

பாளையங்கோட்டை 5-வது வார்டு கவுன்சிலர் ஜெகநாதன் தலைமையில் அந்தப்பகுதி மக்கள் கொடுத்த மனுவில், "எங்கள் வார்டு பகுதியில் சீரான குடிநீர் வழங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. ரகுமத்நகர் பகுதியில் தண்ணீர் திறப்பாளராக பணியாற்றியவர் மாற்றப்பட்டு வேறொருவர் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரும் தற்போது மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். இதனால் தண்ணீர் திறக்க ஆளின்றி குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குடிதண்ணீர் பிரச்சினையை போக்க போதிய பணியாளர்களை நியமித்து குடிநீர் பிரச்சினையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

சாலை, தெருவிளக்கு, குடிநீர் வசதி கேட்டு பலரும் மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்