மின்மாற்றி வெடித்து தீப்பிடித்தது

சிப்காட் துணை மின் நிலையத்தில் மின்மாற்றி ஒன்று அதிக மின் அழுத்தத்தால் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-04 18:21 GMT

மின்மாற்றியில் தீ

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் அருகே உள்ள சிப்காட்டில் 110 கிலோவாட்ஸ் கொண்ட துணை மின் நிலையம் ஒன்று உள்ளது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து அப்பகுதியை சுற்றி உள்ள 90-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த மின் நிலையத்தில் உள்ள மின் மாற்றி ஒன்று நேற்று அதிக மின் அழுத்தத்தால் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து அங்கிருந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக தீயை கட்டுப்படுத்த சிப்காட் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

போராடி அணைத்தனர்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிப்காட் தீயணைப்புதுறை வீரர்கள் முதற்கட்டமாக தீயணைப்பாணை கொண்டு தீயை கட்டுப்படுத்த முயற்சித்த நிலையில் அது முழுமையாக கட்டுப்படுத்த முடியாததால் உடனடியாக தண்ணீரில் வேதிப்பொருளை கலந்து பின்னர் தீ பற்றிய மின்மாற்றியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த தீ விபத்தால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது. இந்த நிலையில் உடனடியாக எரிந்த மின்மாற்றிக்கு பதிலாக புதிய மின் மாற்றி மாற்றப்பட்டு மின்தடை ஏற்பட்டுள்ள கிராமங்களுக்கு மின் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்