5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நாகையில் ரூ.1 கோடி கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-05-31 13:16 GMT

வெளிப்பாளையம்:

நாகையில் ரூ.1 கோடி கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்

நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார், கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி, நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த மோகன் (வயது 37) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இந்த கஞ்சா ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டு நாகை வழியாக விசைப்படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றதும் ெதரியவந்தது.

5 பேர் கைது

இதுதொடர்பாக, பாப்பாக்கோவிலை சேர்ந்த சரவணன் (37), கீச்சாங்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (34), நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த மோகன் (37), அக்கரைப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த சிலம்பு செல்வன் (36), அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த பார்த்திபன் (30) ஆகிய 5 பேரையும் தனிப்படை போலீசார் பிடித்து, நாகை டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இந்த நிலையில் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சரவணன், ஜெகதீஸ்வரன், மோகன், சிலம்பு செல்வன், பார்த்திபன் ஆகிய 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.இதை தொடர்ந்து நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான ஆவணங்களை நாகை டவுன் போலீசார், திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.

----


Tags:    

மேலும் செய்திகள்